| ADDED : நவ 22, 2025 01:19 AM
சேலம், :''விவசாயிகள், அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். போராடுபவர்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்,'' என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி பேசினார்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.இதில் விவசாயிகள் பேசிய விபரம்:தலைவாசல் விவசாயி கோவிந்தன்: பி.எம்.கிஷான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே விவசாயியாக இருந்து, நிலத்தை விற்றவர்கள் கூட, தற்போது பயன் பெற்று வருகின்றனர். எனவே, சீர் திருத்தம் செய்ய புதிதாக விவசாயிகளை பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் சிம் கிஷான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.பெத்தநாயக்கன் பாளையம் விவசாயி நல்லதம்பி: வாழப்பாடி, உழவர் சந்தையில் உண்மையான விவசாயி களுக்கு கடை ஒதுக்க வேண்டும்.வெள்ளக்கல்பட்டி விவசாயி முத்துசாமி: ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்க கூடாது.அப்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள், ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறை அமைக்க கூடாது, சாயப்பட்டறைக்கு எதிராக, நீர் நிலைகளை மூடக்கூடாது. பொது பாதையை அடைக்க கூடாது, கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என பல கருத்துகளை முன்வைத்தனர். இதனால் விவசாய குறைதீர் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.இதையடுத்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:ஜவுளி பூங்கா தொடர்பாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினர் மனு வழங்கி வருகின்றனர். உண்மையாக போரடுபவர்கள் யார் என்று தெரியவில்லை.அறவழி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு மத்தியில், ஒரு சிலர் அங்கு பணிபுரியும் டிரைவர் உள்ளிட்ட வேலை ஆட்களை தாக்குகின்றனர். விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனையாக உள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும். போராடுபவர்களே சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். இது வேதனையாக உள்ளது.இவ்வாறு பேசினார்.