உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு: நீதிபதி கவலை

விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு: நீதிபதி கவலை

சேலம் : சேலம் நீதிமன்ற வளாகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம், வக்கீல்கள் அறை, ஆத்துார் கூடுதல் அமர்வு நீதிமன்ற திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன் தலைமை வகித்து, நீதிமன்றங்களை திறந்து வைத்து பேசியதாவது:நீதிமன்றம் திறப்பது இங்குள்ள நீதிபதிகள், வக்கீல்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். ஆனால், தற்போது திறக்கப்பட்டுள்ள, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்துக்கு, வேலை இல்லாத நிலை வந்தால், அதுதான் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதை போலவே, கவலை தரும் நீதிமன்றமாக, குடும்ப நீதிமன்றங்கள் உருவாகி வருகின்றன. சென்னையில் மட்டும், எட்டு குடும்ப நீதிமன்றங்களில், 56,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நடந்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள், குடும்பத்தினர் இடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவதை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேசுகையில், ''வக்கீல்களின் பணி, நீதிமன்றத்தோடு முடிந்து விடக்கூடாது. சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர், ஆதரவற்றோரின் உரிமைகளை பெற்றுத்தருவது, சட்ட விழிப்புணர்வு தருவது உள்ளிட்ட சமூக பணிகளை ஆற்ற வேண்டும்,'' என்றார்.உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பேசுகையில், ''பாதிக்கப்பட்டோருக்கு உரிய காலத்தில் கிடைக்கும் நீதிதான் உண்மையானதாக இருக்கும். ''உரிய காலத்தில் நீதி பெற, கூடுதல் நீதிமன்றம் உதவும் என்றாலும், அதில் வக்கீல்களின் ஒத்துழைப்பு அவசியம். இருதரப்பு ஒத்துழைப்புடன், விரைவாக நீதியை பெற முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை நீதிமன்றங்கள் திறந்தாலும் போதுமானதாக இருக்காது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை