உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் தரையில் அமர்ந்து மாணவர்கள் படிக்கும் அவலம்; அரசு பள்ளியில் போதிய வகுப்பறை கட்ட வலியுறுத்தல்

மண் தரையில் அமர்ந்து மாணவர்கள் படிக்கும் அவலம்; அரசு பள்ளியில் போதிய வகுப்பறை கட்ட வலியுறுத்தல்

அயோத்தியாப்பட்டணம் : அரசு மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் மண் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் போதிய வகுப்பறைகள் கட்ட, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் வீராணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வீராணம், கோராத்துப்பட்டி, சின்னனுார், வளையக்காரனுார், டி.பெருமாபாளையம், தைலானுார் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து, 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு, 6 கட்டடங்களில், 24 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. ஆனால், 16 வகுப்பறைகள் மட்டும் உள்ளதால், 8 வகுப்பறை மாணவர்களுக்கு கட்டடம் இல்லை. இதனால், 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர், அங்குள்ள மரத்தடியில் அமர வைக்கப்படுகின்றனர். வெயில் அடிக்கும்போது சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழை பெய்தால் அங்கும், இங்கும் ஓட வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவியர் தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'வகுப்பறை கட்ட போதிய இட வசதி இல்லை. இருப்பினும் வகுப்பறைகள் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராணி கூறுகையில், ''பள்ளியில் பாதி வகுப்பறைகள் அறநிலையத்துறை இடத்தில் உள்ளன. அறநிலைத்துறை இடம் கொடுத்தால் வகுப்பறை கட்ட முடியும். இல்லை எனில் வேறு இடங்களையாவது தேர்வு செய்ய, அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும்,'' என்றார்.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனுமதியின்றி பள்ளி கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இருப்பினும் நிலத்தை பள்ளிக்கு வழங்குவது குறித்து அறநிலையத்துறை, பள்ளி கல்வித்துறை இணைந்து பேசி தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றனர்.ஆசிரியர்களும் பற்றாக்குறைவீராணம் பள்ளியில் மகன் படிக்கிறார். இங்கு, 6, 7, 8, 9ம் வகுப்புகளில் படிக்கும், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், வகுப்பறை இல்லாமல் வெளியே வெயிலில் அமர்ந்து படிக்கின்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு ஆய்வகங்களும் இல்லாததால், மாணவர்களின் கற்பித்தல் திறன் பாதிக்கப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாணவர்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.- பரணி, 30, கூலித்தொழிலாளி,மாணவரின் பெற்றோர், பள்ளிக்கூடத்தானுார்.கழிப்பறை கூட இல்லைஇங்குதான் இரு மகள்களும் படிக்கின்றனர். 6 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 150 முதல், 270 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்டடங்களே இல்லாமல், மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். கரும்பலகையின்றி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். வகுப்பறையில் உள்ள மாணவர்களும் டெஸ்க், பெஞ்ச் இல்லாமல் நெருக்கமாக அமர வைக்கப்பட்டுள்ளனர். தவிர கழிப்பறையின்றி, அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் கேட்டு, மாணவியர் பயன்படுத்தும் அவலம் உள்ளது. - சண்முகம், 45, விவசாயி,மாணவியரின் பெற்றோர், சின்னவீராணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ