உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடப்பாண்டு கோடை பருவத்தில் 2,000 ஏக்கரில் எள் சாகுபடிக்கு இலக்கு

நடப்பாண்டு கோடை பருவத்தில் 2,000 ஏக்கரில் எள் சாகுபடிக்கு இலக்கு

வீரபாண்டி:நடப்பாண்டு கோடை பருவத்தில் சேலம் மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் எள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:தற்போதைய கோடை பருவத்தில் சேலம் மாவட்டத்தில், 2,000 ஏக்கரில் எள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்து நடவு பணி நடந்து வருகிறது. எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற சரியான நேரத்தில் சரியான அளவில் உரமிடுதல் அவசியம். மண்ணை வளப்படுத்த எள் பயிரிடும் வயலில் கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு, 12.5 டன் மட்கிய தொழு உரம் இட வேண்டும்.மண் பரிசோதனை செய்து அவற்றின் தன்மைக்கேற்ப, 'மானாவாரி' சாகுபடிக்கு ரசாயன உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு, 23:13:13 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து கலந்து இட வேண்டும். இல்லையெனில், 17:13:13 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துகளுடன், 600 கிராம் 'அசோஸ்பைரில்லம்', 600 கிராம் 'பாஸ்போ பேக்டீரியா' கலந்து உரமிடுதல் நன்மை செய்யும்.'இறவை' சாகுபடிக்கு, 35:23:23 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து அல்லது 21:23:23 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துடன், 600 கிராம் 'அசோஸ்பைரில்லம்' 600 கிராம் 'பாஸ்போபேக்டீரியா' கலந்து தெளிக்க வேண்டும்.விதை நேர்த்தி செய்ய ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையை, 125 மி.லி., திரவ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா கரைசலில் நனைத்து, 30 நிமிடங்கள் நிழலில் காய வைத்து பின் விதைக்க வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை அடி உரமாக அளிக்க வேண்டும். ஹெக்டேருக்கு, 5 கிலோ 'மாங்கனீஸ் சல்பேட்' இட வேண்டும். 30 செ.மீ., இடைவெளியில், 5 செ.மீ., ஆழத்தில் வாய்க்கால் தோண்டி உர கலவைகளை போட்டு, 3 செ.மீ., ஆழத்துக்கு மண் போட்டு மூடி விட வேண்டும்.தமிழக வேளாண் பல்கலையின் நுண்ணுாட்ட கலவையை ஹெக்டேருக்கு, 7.5 கிலோ மானாவாரி சாகுபடிக்கும், இறவை சாகுபடிக்கு, 12.5 கிலோ நுண்ணுாட்ட கலவையை செறிவூட்டப்பட்ட தொழு உரமாக இட வேண்டும். மேற்கூறிய வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து எள் சாகுபடியில் அதிக லாபம் பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ