சேலம் : சேலத்தில் நடந்த, அ.ம.மு.க., கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேனர், கொடிகள் கட்டப்பட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவர் பூமொழி, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியிடம் புகார் மனு அளித்தார்.அதில் கூறியிப்பதாவது:சேலத்தில், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி சார்பில் கொடி கம்பம் அமைக்க, தெற்கு சரக துணை கமிஷனர் மதிவாணனிடம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், பொது இடங்களில் எந்த கொடி கம்பங்களும், பேனர்களும் வைக்க அனுமதிக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.அதே நேரத்தில், நேற்று முன்தினம் குரங்குசாவடி பஸ் ஸ்டாப்பில், போலீஸ் பாதுகாப்புடன், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அக்கட்சியின் கொடியை ஏற்றி உள்ளார். எனவே, பொது இடத்தில் கொடி கம்பத்தை வைத்தவர்கள் மீதும், கொடியேற்றிய தினகரன், பாதுகாப்பு வழங்கிய போலீஸ் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாக வழக்குப்பதிவு செய்து. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.