ஆத்துார்: ''இளைஞர் அணி மாநில மாநாடு, தி.மு.க.,வுக்கு திருப்புமுனையாக அமையும்,'' என, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு கூறினார்.சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும், 21ல், தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாடு நடக்கிறது. இதன் பணிகள் குறித்து நேற்று, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:வரும், 21ல், நடக்கவுள்ள தி.மு.க., இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மாநாட்டில், 1.50 லட்சம் இளைஞர் அணியினர் மற்றும் கட்சியினர் என, ஐந்து லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். தி.மு.க.,வுக்கு திருப்புமுனை தரும் வெற்றி மாநாடாக அமையும். மாநாட்டின் முதல் நாள், 20ல், மாலை, 5:00 மணியளவில் முதல்வர் ஸ்டாலின், மாநாடு இடத்திற்கு வந்து பைக் பேரணியை பார்வையிடுகிறார். அவரிடம், 'ட்ரோன்' மூலம் மாநாடு குறித்து விளக்கம் அளிக்கப்படும்.வரும், 21 காலை, 9:00 மணியளவில் கொடியேற்றி வைத்து மாநாடு துவங்குகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து, கட்சியினர் வருவதால் பல இடங்களில் பார்க்கிங், உணவு வழங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு பந்தலில், அந்தந்த மாவட்ட செயலர் மூலம் உணவு வழங்கப்படும். மாலை, 6:00 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.தி.மு.க., மாவட்ட செயலர்கள் சிவலிங்கம், செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, சுரேஷ்குமார், சின்னதுரை, ஆறுமுகம், ஒன்றிய, நகர செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.