| ADDED : ஜூலை 14, 2011 09:13 PM
சிவகங்கை : வெளிநாடு அனுப்புவதாக கூறி 20 பவுன் நகையை விற்று மோசடி செய்தவரை மதகுபட்டி போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சிலந்தங்குடிபட்டியை சேர்ந்த வைரக்கண்ணு மனைவி ராமலட்சுமி (50). இவர்களது உறவினர் வலையராதினிபட்டியை சேர்ந்த முருகேசன் (33). தனியார் பண பரிமாற்றம் நிறுவனம் நடத்தி வருகிறார். 2 ஆண்டிற்கு முன், தனது மகனை வெளிநாடு அனுப்பவேண்டும் என, முருகேசனிடம், ராமலட்சுமி ஆலோசனை கேட்டுள்ளார். இதற்காகும் செலவு தொகையை தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, தன்னிடம் இருந்த 20 பவுன் நகையை கொடுத்துள்ளார். அவற்றை அவர், தனியார் வங்கியில் ஒரு லட்ச ரூபாய்க்கு, அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார். அதற்கு பின், பணத்திற்கான வட்டியை முருகேசனே கட்டி வந்துள்ளார். இந்நிலையில், தனியார் வங்கியில் இருந்த 20 பவுன் நகையை மீட்டு, மற்றொரு வங்கியில் 2 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்தார். பின், நகைகளை மீட்டு விற்று விட்டார். நகையை திரும்ப தருமாறு, ராமலட்சுமி கேட்டும் தரவில்லை. நகையை தராமல் ஏமாற்றி, மோசடி செய்து விட்டதாக, மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். முருகேசனை கைது செய்தனர்.