| ADDED : ஜூன் 01, 2024 04:37 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவது தெரிந்தால், புகார் அளிக்கலாம் என தொழிலாளர் நல உதவி கமிஷனர் முத்து தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை அருகே அரசனுாரில் மாவட்ட குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினர் அரசனுார், மணலுார் தொழிற்சாலை பகுதியில் கூட்டாய்வு செய்தனர். இந்த ஆய்வில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்படவில்லை. அதே போன்று வயது 14 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் எந்த ஒரு பணியிலும் செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற பணிகளில் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறும் பட்சத்தில் ரூ.20 ஆயிரம் குறையாமலும், ஆனால் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு குறையாமல், ஆனால், 2 ஆண்டுக்கு மேற்படாமல் சிறை தண்டனை விதிக்கப்பட வழிவகை உள்ளது. மேலும் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் கண்டறியப்பட்டால், http://pencil.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.மேலும் குழந்தை தொழிலாளர் பற்றிய புகாருக்கு சிவகங்கை, காஞ்சிரங்காலில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.