உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை முதலீடுகளை மீட்டுத்தர மனைவி கோரிக்கை

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை முதலீடுகளை மீட்டுத்தர மனைவி கோரிக்கை

திருப்பாச்சேத்தி,:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஏமாற்றிய நிறுவனத்திடம் இருந்து பணத்தை கைப்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டுமென அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பாச்சேத்தியை சேர்ந்த டைல்ஸ் வியாபாரி ராமலிங்கம் 57, இவர் மதுரையை மையமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனம் ஒன்றில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் மூன்று ஆண்டு முடிவில் ஆறு லட்சம் ரூபாய் கிடைக்கும் என வெளியிட்ட விளம்பரத்தை நம்பி பல்வேறு தவணைகளில் பணம் செலுத்தியுள்ளார்.ராமலிங்கத்தின் உறவினர்களும் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை நகை, நிலம் ஆகியவற்றை விற்பனை செய்து பணம் செலுத்தியுள்ளனர். 2023ல் முதிர்வு தொகை யாருக்கும் கிடைக்கவில்லை. மதுரையில் உள்ள நிறுவனத்தில் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை. பலரும் திருமணம், வீடு கட்ட என சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். பணம் தராத நிதி நிறுவனத்தின் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வழக்கு முடிவடைந்த பின்தான் பணம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.ராமலிங்கத்தை நம்பி பணம் கட்டியவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். மன உளைச்சலில் இருந்த ராமலிங்கம் கடந்த 6ம் தேதி மாலை திருப்பாச்சேத்தியில் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ராமலிங்கத்தின் மனைவி பானுமதி கூறுகையில் : நியோ மேக்ஸ் மற்றும் துணை நிறுவனத்திடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தில் பணம் பறிகொடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும். ராமலிங்கம் போன்று வேறு யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ