| ADDED : ஜூலை 19, 2024 11:51 PM
இளையான்குடி : இளையான்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்,மருந்தாளுநர்கள், ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். 15க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 டாக்டர்கள் பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.3 மருந்தாளுனர்கள் பணியிடம் உள்ள நிலையில் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளதால் அவரும் விடுமுறை எடுத்தால் மருந்து, மாத்திரை பெற நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களில் காயமடைபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.மகப்பேறு டாக்டர் பணியிடமும் காலியாக இருப்பதால் இப்பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக இளையான்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள்,மருந்தாளுநர்கள்,ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.