| ADDED : ஜூலை 18, 2024 11:47 PM
பூவந்தி:பூவந்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மர்மநபர்கள் பூட்டுக்களை சேதப்படுத்தியது தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து பள்ளிக்கு வாட்ச்மேன் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பூவந்தியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 91 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் சிலர் போதையில் அட்டகாசம் செய்ததை கண்டித்ததால் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை தடவி திறக்க விடாமல் செய்தனர். இதனையடுத்து போலீசார் பூட்டுகளை உடைத்து பள்ளியை திறந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து பூவந்தி கிராமத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தினமலர் செய்தியை பகிர்ந்துள்ளனர். அதில் பூவந்தியில் உள்ள நாடகமேடை, தெருக்கள், கண்மாய் கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும், வெளியூர் நபர்கள் இதில் ஈடுபட்டிருக்க முடியாது. பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த போராடி வரும் சூழலில் தொடக்கப்பள்ளியில் நடந்த இந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும், இனி இதுபோல் எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க அரசு அல்லது பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு இரவு நேர வாட்ச்மேன் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.