உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயம் பொய்த்ததால் கிராமத்தை காலி செய்த மக்கள்

விவசாயம் பொய்த்ததால் கிராமத்தை காலி செய்த மக்கள்

மானாமதுரை : மானாமதுரை அருகே சி.கரிசல்குளத்தில் விவசாயம் பொய்த்து போனதாலும், அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கிராம மக்கள் ஊரை காலி செய்வதால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.மானாமதுரை சின்ன கண்ணனுார் அருகே சி.கரிசல்குளம் கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தில் 30ஆண்டுகளுக்கு முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வந்தனர், தேவையான அடிப்படை வசதி இல்லாத நிலை, விவசாயம் பொய்த்துப் போனதால் இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் பிழைப்பு தேடி பல்வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர்.கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் தற்போது கீழே இடிந்து விழும் நிலையிலும், பல வீடுகளில் ஆட்கள் இல்லாமல் முள் புதர் வளர்ந்து காணப்படுகின்றன.தற்போது 4 வீடுகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளதையடுத்து அந்த வீடுகளைச் சேர்ந்தவர்களும் மதுரையிலிருந்து விவசாய நேரங்களில் மட்டும் கிராமத்திற்கு வந்து விவசாய வேலைகளை பார்த்துவிட்டு மதுரைக்கு சென்று விடுகின்றனர்.இக்கிராமத்திற்கு சொந்தமான கண்மாய் மூலம் 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் நெல் விவசாயம் செய்து வருகிற நிலையில் இக்கண்மாய் கலுங்கு முற்றிலும் உடைந்து சேதமடைந்துள்ளதால் மழை நேரங்களில் கண்மாயில் சேரும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அவ்வப்போது விவசாயத்திற்கு வரும் கிராம மக்கள் சாக்கு மூடைகளை வைத்து கலுங்கை அடைத்து வருகின்றனர். வருடந்தோறும் மழை காலங்களில் கண்மாயில் தண்ணீர் நிறைந்தால் கண்மாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே சென்று விடுவது வாடிக்கையாக உள்ளது, விவசாயிகள் எவ்வளவு முயன்றாலும் அடைக்க முடிவதில்லை.இதனால் நெற் பயிர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் கருகி வருவதால் தற்போது செய்து வரும் விவசாயத்தையும் கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சி.கரிசல்குளம் விவசாயிகள் கூறியதாவது: கடந்த 7 வருடங்களாக கண்மாயில் சேதமடைந்த கலுங்கை சரி செய்ய கோரி கலெக்டர், முதல்வர் வரை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஏற்கனவே அடிப்படை வசதி இல்லாமல் கிராமம் காலியாக உள்ள நிலையில் தற்போது விவசாயமும் செய்ய முடியாமல் போனால் எங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கவலையுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !