| ADDED : ஜூலை 17, 2024 12:05 AM
காரைக்குடி : காரைக்குடியில் அரசு சார்பில் இலவச பட்டா வழங்கப்பட்ட நிலையில், பட்டாவிற்கு உரிய இடம் எது என தெரியாமல் இடம் கிடைக்குமா என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். காரைக்குடி வேடன்நகரில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், 106 குடும்பத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித்திற்கு அங்குள்ள பெண்கள் பாசி மாலை அணிவித்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு பட்டா கிடைத்ததால், தங்களது வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். பட்டா வழங்கப்பட்டதோடு சரி இதுவரை தங்களுடைய இடம் எங்கே உள்ளது என்பது கூட தெரியாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தாசில்தார் ராஜா கூறுகையில்: பட்டா வழங்கப்பட்டுள்ளது. இடம் அளவீடு செய்யும் பணியும் முடிந்து விட்டது. கற்கள் நடும் பணி மட்டுமே நடைபெற உள்ளது. கற்கள் தயாராக உள்ளது. விரைவில் கற்கள் நடும் பணி முடிந்து இடம் ஒப்படைக்கப்படும்.