| ADDED : ஏப் 12, 2024 10:44 PM
பிள்ளையார்பட்டி : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை தீர்த்தவாரியும், இரவில் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தலும் நடைபெறும். நகரத்தார் கோயிலான இங்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். நாளை அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தால் பூஜைக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் துவங்கும். மூலவர் தங்கக் கவசத்திலும், உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் அருள்பாலிப்பர். காலை 9:30 மணிஅளவில் உற்ஸவவிநாயகர், வெள்ளிப்பல்லக்கில் அங்குசத்தேவரும், அஸ்திரத்தேவரும் புறப்பாடாகி கோயில் பிரகாரம் வலம் வந்து கோயில் குளத்தின் படித்துறையில் எழுந்தருளுவர்.தொடர்ந்து அஸ்திரத் தேவர், அங்குசத் தேவருக்கும் பல திரவியங்களால் அபிஷேகம் நடந்து, தீபாராதனை நடைபெறும். பின்னர் சிவாச்சாரியாரால் குளத்தில் மூழ்கி தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு 7:00 மணி அளவில் மூலவர் சன்னதிமுன் மண்டபத்தில் சிவாச்சாரியாரால் புதிய குரோதி வருட பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு, சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளதாக கோயில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் தெரிவித்தனர்.