| ADDED : ஆக 12, 2024 11:13 PM
திருப்புல்லாணி : தென்மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் முறையான பராமரிப்பின்றி, காலம் கடந்தும் இயக்கப்படும் அரசு பஸ்களின் நிலை, பரிதாபமாக உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் மழை பெய்தால் முழுதும் ஒழுகும் நிலையில், அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பின்பக்க கண்ணாடி ஏதுமின்றி திறந்தவெளியாக பஸ்சை போக்குவரத்து கழகம் இயக்குகிறது.ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி, ஆனைகுடி, பி.மோர்க்குளம், எம்.மோர்க்குளம், தில்லையேந்தல் வழியாக, கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் வரை 1 ஏ என்ற வழித்தடத்தில் டி.என் 63 என்.1483 அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பின்பக்க கண்ணாடி ஏதுமின்றி, திறந்த வெளியாக உள்ளதால் வேகமாகச்செல்லும் போது காற்றின் வேகத்தால் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.பயணியர் கூறியதாவது: கண்ணாடி இல்லாத நிலையில் பின்பக்க ஆறு இருக்கைகளிலும் அமர்ந்து பயணிப்பதால், அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் போது, பெரும் பாதிப்பை பயணியர் சந்திக்கின்றனர்.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சேதமடைந்த பஸ்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். பஸ்களை முறையாக பராமரித்து புதுப்பித்து இயக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.