| ADDED : மார் 28, 2024 11:20 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் நடைபெற்ற இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியினர் தேர்தல் விதியை அப்பட்டமாக மீறிய நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்தனர்.சிவகங்கை தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்.,வேட்பாளர் கார்த்திக்கிற்கு ஆதரவாக நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.எஸ்.புதுாரில் தனியார் மண்டபத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு கூட்டம் நடந்த நிலையில் அதற்காக சுற்று வட்டார பகுதியில் இருந்து மினி லோடு வேன்களில் பெண்கள் உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.அங்கிருந்த தேர்தல் பார்வையாளர்கள் வேன்களை போட்டோ எடுத்தனர்.தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன்,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,வேட்பாளர் கார்த்தி கூட்டத்தில் பேசினர்.தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு சிங்கம்புணரியில் உள்ள தி.மு.க., நிர்வாகிக்கு சொந்தமான தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மினி லோடு வேன்களில் பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். கூட்டம் நடப்பது தெரிந்து சந்தைக்கு காய்கறி வாங்க வந்திருந்த பெண்களும் அங்கு கூடினர். மண்டபம் உள்ளே நிரம்பி வழிந்த நிலையில் வெளியேயும் பலர் காத்திருந்தனர். கூட்டம் முடிந்து வேட்பாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் சென்ற பிறகு வெளியில் கத்திருந்தவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு உள்ளே அனுப்பப்பட்டு கதவு பூட்டப்பட்டு 'கவனிப்பு' நடந்தது.அப்பகுதியில் தேர்தல் பார்வையாளர்கள் முகாமிட்டிருந்தும் அவர்கள் முன்னிலையில் அப்பட்டமாக இந்த விதிமீறல் அரங்கேறியது. ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் அலுவலர்கள் கண்டும் காணாமல் போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.