உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சென்னை - ராமேஸ்வரத்திற்கு ‛வந்தே பாரத் ரயில்: சிவகங்கை தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு  

சென்னை - ராமேஸ்வரத்திற்கு ‛வந்தே பாரத் ரயில்: சிவகங்கை தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு  

சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதி வளர்ச்சிக்கு காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக சென்னை - ராமேஸ்வரத்திற்கு 'வந்தே பாரத்' ரயிலை இயக்க மத்திய ரயில்வே அமைச்சரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட காரைக்குடி, அறந்தாங்கி,பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.அந்த ரயிலை சிவகங்கை வழியாக மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். ராமேஸ்வரம் - அயோத்யா எக்ஸ்பிரஸ் மற்றும் செகந்திராபாத் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களை சிவகங்கையில் நிறுத்தி செல்ல வேண்டும். புதுவயல், கோட்டையூரில் மூடப்பட்ட பயண சீட்டு முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும். கொரோனாவிற்கு பின் செட்டிநாடு ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல் செல்லும் பல்லவன், செங்கோட்டை, ராமேஸ்வரம் மற்றும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரைக்குடி அருகே ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும். அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் மாற்றுத்திறனாளி, முதியோர், நோயாளிகள் நடைமேடையில் சென்று வர பேட்டரி கார், தானியங்கி மூன்று சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். தாம்பரம் - -செங்கோட்டை ரயிலை புதுவயல் ஸ்டேஷனில் நிறுத்தி செல்ல வேண்டும். ராமேஸ்வரம் - கோயம்புத்துார் (வண்டி எண்: 16618/19) இடையே இயக்கப்படும் வாராந்திர ரயிலை தினமும் இயக்க வேண்டும். திருச்சி -ஹவுரா வாராந்திர சிறப்பு ரயிலை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.கொரோனாவிற்கு முன்பு வரை ராமேஸ்வரம் -- ஜோத்பூர் வரை இயங்கி வந்த ரயிலை, திருச்சியுடன் நிறுத்தி விட்டனர். அந்த ரயிலை மீண்டும் ராமேஸ்வரம் வரை இயக்க வேண்டும். எர்ணாகுளம் - -வேளாங்கண்ணி வாராந்திர ரயிலை பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி தினமும் இயக்க வேண்டும்.

ராமேஸ்வரத்திற்கு 'வந்தே பாரத்' ரயில்

புண்ணியஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு வடமாநில பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக, ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூரூக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும். திருச்சி - மானாமதுரைக்கு கூடுதலாக பகல் நேர ரயில்கள் இயக்க வேண்டும்.மதுரை வழியாக செல்லும் சென்னை - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலை பழைய வழித்தடமான திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்க வேண்டும். சென்னையில் இருந்து திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும்.

காரைக்குடி -- மதுரை புதிய வழித்தடம்

காரைக்குடியில் இருந்து திருப்புத்துார், மேலுார் வழியாக மதுரைக்கு 85.7 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை திட்டம் அமைக்க 2014 ம் ஆண்டு ரயில்வே கமிட்டி ஆய்வு செய்தது. ஆனால், இந்த புதிய ரயில் பாதை திட்டம் இது வரை செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளனர். மத்திய அரசு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்து, இப்புதிய வழித்தடத்தை துவக்க வேண்டும்.அதே போன்று காரைக்குடி, தேவகோட்டை, ராமநாதபுரம் வழியாக 214.81 கி.மீ., துாரமுள்ள துாத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை திட்டம், காரைக்குடி, திருப்புத்துார், நத்தம் வழியாக திண்டுக்கல்லுக்கு 105 கி.மீ., துார அகல ரயில் பாதை திட்டங்கள் ரயில்வே கமிட்டி ஆய்வுடன் நிற்கிறது. அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும். மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டி துறைமுகம் வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை தொகுதி மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஆக 10, 2024 09:21

ராகேஸ்வரம்... இந்துக்களின் புண்ணிய பூமி .. செட்ட்டிநாட்டு மக்களின் ஏகோபித்த வேண்டுகோள் ,,தாம்பரம் மண்டபம் வண்டுபாரத் ரயில் இணைப்பு- மண்டபம் அதிகாலை ஐந்து மணிக்கு புறப்பட்டு காரைக்குடி, திருச்சி வழியே தாம்பரம் மதியம் ஒரு மணிக்கு அடையலாம் . திரும்ப இரண்டு மணிக்கு தாம்பரம் கிளப்பி மண்டபம் சுமார் பத்து மணிக்கு திரும்ப வரலாம் .


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை