| ADDED : ஆக 05, 2024 10:01 PM
திருப்புவனம், - திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்து 11 ஆண்டுகளாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகின்றன. விவசாய பணிகளுக்கு ஏதுவாக திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. மேலும் சிவகங்கை மாவட்டத்திலேயே அதிகளவு கால்நடைகள் திருப்புவனம் பகுதிகளில் தான் வளர்க்கப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் உள்ளிட்டவைகளை விவசாயிகள் இருப்பு வைத்திருப்பது வழக்கம். கோடை காலங்களில் மின் வயர்கள் உரசியும், அஜாக்கிரதையாலும் வைக்கோல் தீப்பற்றுவது வழக்கம். மேலும் கோடை காலங்களில் கரும்பு வயல்களில் அதிகளவு தீ விபத்தும் நேரிட்டு வருகின்றன.தீயை அணைக்க 28 கி.மீ., தூரத்தில் உள்ள மானாமதுரையில் இருந்துதான் தீயணைப்பு வீரர்கள் வரவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக திருப்பாச்சேத்தி பகுதியில் தொடர்ச்சியாக கரும்பு வயல்கள் தீப்பிடித்து எரிந்து பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகள் வளர்த்த கரும்பு வயல் தீ விபத்தில் எரிந்து பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதுபோல வடகிழக்கு பருவமழை காலங்கள் தவிர மற்ற காலங்களில் கண்மாய்கள், கிணறுகளில் ஓரளவிற்கு நீர்மட்டம் இருப்பதும் உண்டு. நீர்நிலைகளில் தவறி விழுந்து போராடுபவர்களை மீட்கவும் மானாமதுரையில் இருந்துதான் வீரர்கள் வரவேண்டியுள்ளது. விபத்து உள்ளிட்ட காலங்களில் உயிரிழப்பை தவிர்க்க திருப்புவனத்தை மையமாக வைத்து தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. திருப்புவனம் நகரம் கடந்த 2013ல் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட போது தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்படும் என தெரிவித்தனர். 11 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்படவில்லை.