| ADDED : நவ 21, 2025 12:22 AM
காரைக்குடி: நேற்று முளைத்த காளான் எல்லாம் எடுபடாது என காரைக்குடியில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தே.மு.தி.க., சார்பில், உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பிரசார நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஈ.வெ.ரா., சிலையில் இருந்து, ஐந்து விளக்கு வரை விஜயகாந்த் ரத யாத்திரையை பிரேமலதா தொடங்கி வைத்தார். பொருளாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர் திருவேங்கடம், மாவட்ட கழக அவைத் தலைவர் அருணா கண்ணன், திருப்புத்துார் தொகுதி பொறுப்பாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின் பிரேமலதா பேசியதாவது; 2026 தேர்தல் தே.மு.தி.க., விற்கு மட்டு மல்ல தமிழகத்திற்கே முக்கிய தேர்தல். 2026ல் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கி தமிழக மக்கள் வாழ்ந்ததாக சரித்திரத்தை உருவாக்க வேண்டும். வரும் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணியை அமைப்போம். தே.மு.தி.க., கூட்டணி வைக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் நேற்று முளைத்த காளான் எல்லாம் எடுபடாது. ஒரு மழைக்கே அது தாங்காது. இனிமேல் தான் வரலாறு தொடங்க போகிறது. தொண்டர்கள் மனம் தளராமல் இருக்க வேண்டும். 2026 ல் பல மாயாஜாலங்கள் நடக்கும். இதுவரை கூட்டணி மந்திரிசபையை யாரும் பார்த்ததில்லை. ஆட்சியில் பங்கு. அனைவருக்கும் மந்திரி சபை இந்த கூட்டணியில் நடக்கும். 63 ஆயிரம் பூத் கமிட்டி அமைத்த ஒரே கட்சி நம் கட்சி. ஆளுங்கட்சி பூத் கமிட்டி அமைப்பது பெருமையான விஷயம் அல்ல. 2026 ல் விஜயகாந்த் ஆசியுடன் தே.மு.தி.க., மகத்தான வெற்றி பெறும். இருப்பது ஓட்டுரிமை மட்டும் தான். இன்று அந்த ஓட்டையும் கொள்ளையடிக்க வருகிறார்கள். ஓட்டுரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு பேசினார்.