| ADDED : ஜன 15, 2024 12:19 AM
சிவகங்கை : சிவகங்கை நகரில் பொங்கல் விற்பனை படு ஜோராக நடந்தாலும் நகராட்சியில் ரோட்டோரத்தில் விற்பதற்கு கடை வாடகை எனக்கூறி ரூ.150 வரை வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று சிவகங்கை காந்தி வீதியில் கிராமப்புற விவசாயிகள் மஞ்சள், தேங்காய், கூரைப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர்.ரோட்டில் தரையில் கடைவிரித்து வியாபாரம் செய்த கிராம விவசாயிகளிடம், நகராட்சி கடை வாடகை ஒப்பந்ததாரர்கள் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தது தான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து மேலசாலுார் விவசாயி முருகன் கூறியதாவது, நான் மொத்தமே ரூ.1000 மதிப்பிலான மஞ்சள், பூசணி, கூரைப்பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தேன்.இந்த பொருட்களை விற்பனை செய்ய நகராட்சி ஒப்பந்ததாரர்கள் ரூ.150 வரை வசூலித்தது தான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி அதிகாரிகள், இது போன்று முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.