| ADDED : ஜன 09, 2024 12:14 AM
சிவகங்கை : பெரியாறு பாசன கால்வாயில் இருந்து விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கப்படுகிறதா என கலெக்டர் ஆஷா அஜித் நேரடி கள ஆய்வு செய்தார்.முல்லை பெரியாறு பாசன கால்வாய் மூலம் மேலுார் பொதுப்பணித்துறை கோட்டம் மூலம், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 48ம் கால்வாய், லெசீஸ், ஷீல்டு, கட்டாணிபட்டி ஆகிய கால்வாய்களுக்கு விநாடிக்கு60 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், மேலுாரில் இருந்து வரும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாரபட்சமாக குறைவாக திறப்பதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, நேரடியாக கள ஆய்வு செய்து, சிவகங்கை மாவட்டத்திற்கான முழுமையான தண்ணீரை பெற்றுத்தருவதாக கலெக்டர் உறுதி அளித்தார்.சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கண்மாய்பட்டி வழியாக சிவகங்கைக்குள் நுழையும் கால்வாயில் தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதா என்பதை கள ஆய்வு செய்தார். கலெக்டர் ஆய்வுக்கு முன் சிவகங்கைக்கு வரும் கால்வாயில் 5 முதல் 15 கன அடி மட்டுமே திறந்து விட்டுள்ளனர். கலெக்டர் வருவதை அறிந்த மேலுார் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிவகங்கைக்குரிய முழு அளவான விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக, ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். இதன் மூலம் சிவகங்கைக்கான பங்கு நீரை பெற்றுத்தந்த கலெக்டருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். ஆய்வின் போது பொதுப்பணித்துறை பெரியாறு பாசன கால்வாய்திட்ட செயற்பொறியாளர் சிவபிரபாகர், உதவி கோட்ட பொறியாளர் தாஸ், முல்லை பெரியாறு பாசன விவசாய கூட்டமைப்பு தென் மாவட்ட பொது செயலாளர் ஆதிமூலம், சிவகங்கை மாவட்ட செயலாளர் தமறாக்கி ராமலிங்கம், விவசாயிகள் சேதுராமன், ஆபிரகாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.