| ADDED : ஆக 19, 2024 12:32 AM
காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில், பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர்கள் விடுதிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட மேலாண்மை குழு செயல்படுவதில் குறைபாடு நிகழ்வதாக புகார் எழுந்துள்ளது.மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கென 42 அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா, விடுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, விடுதி அலுவலர்கள், காப்பாளர், மக்கள் பிரதிநிதிகளை கொண்ட மேலாண்மை குழு செயல்படுகிறது. மாணவர்கள் தெரிவிக்கும் குறைகளை இக்குழுவினர் மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவத்து, நிவர்த்தி பெற்றுத்தர வேண்டும். ஆனால், இந்த குழு சிறப்பாக செயல்படாததால், மாணவர்களின் கல்வி, உணவின் தரம், கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.இது குறித்து சந்திரசேகர் கூறியதாவது: விடுதி மேலாண்மை குழுவிற்கு மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும். அக்கூட்டத்தில் விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா. பிற அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். தினமும் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை உறுதி செய்ய வேண்டும். இரவு காவலர்கள் இல்லாத விடுதிகள் பல உள்ளன. இவை குறித்தும் புகார் தெரிவிக்க குழு அக்கறை செலுத்துவதில்லை. விடுதி மேலாண்மை குழு முறையாக தன் கடமையை செய்து, மாணவர்களுக்கு உரிய வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.