| ADDED : ஆக 10, 2024 05:50 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு மாடுகள் வெண்டை, கடலை செடிகளை காலி செய்துவிட்டு சென்றன.இவ்வொன்றியத்தில் விவசாயிகள் மழை குறைவு காலங்களில் கூட போர்வெல், கிணற்று நீரைக் கொண்டு நெல், மிளகாய், கடலை, தக்காளி, கத்தரி விளைவித்து வருகின்றனர். சில வருடங்களாக காட்டு மாடுகள் தொல்லை அதிகரித்ததால் விவசாயம் பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு மாடுகள் மேலவண்ணாரிருப்புக்கும் கொட்டாம்பட்டிக்கும் இடைப்பட்ட மலைப்பகுதியில் திரிகின்றன. அவை இரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து தோட்டங்களை நாசம் செய்கிறது. நேற்று தேனம்பட்டி கிராமத்திற்குள் நுழைந்த 20க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் அப்பகுதியில் உள்ள வெண்டை, கடலை பயிர்களை முழுவதும் காலி செய்து விட்டு சென்றன. விவசாயிகள் தடுக்க முற்பட்ட போதும் முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.காத்தன், விவசாயி தேனம்பட்டி: 2 ஏக்கரில் வெண்டை, கடலை சாகுபடி செய்திருந்தேன். இரவு காட்டு மாடுகளை விரட்டுவதற்காக தோட்டத்திலேயே படுத்திருந்தேன். 20-க்கும் மேற்பட்ட மாடுகள் ஒரே நேரத்தில் புகுந்து அனைத்து வெண்டை காய்களையும் கடலை செடிகளையும் தின்று நாசம் செய்து விட்டது. மாடுகளை விரட்ட செல்லும்போது அவை முட்ட வருகின்றன. காட்டு மாடுகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றார்.