தே.ஜ.கூ.,யிலிருந்து அ.ம.மு.க., வெளியேற நயினார்நாகேந்திரன் செயல்பாடே காரணம்
மானாமதுரை: ''தேசிய ஜனநாயக கூட்டணியில் (தே.ஜ.கூ.,) இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க.,) வெளியேறுவதற்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளும், அவரது மனநிலையும் தான் முக்கிய காரணம்,'' என, மானாமதுரையில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் பா.ஜ., தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து அவர் கூட்டணியை சரியாக கையாளவில்லை. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற அ.ம.மு.க., தொண்டர்களும், நிர்வாகிகளும் கொடுத்த அழுத்தத்திற்கு காரணமே நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளும், மனநிலையும் தான். செலெக்ட்டிவ் அம்னீசியா, தூக்கத்தில் நடக்கிற வியாதி இருப்பது போன்று நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் உள்ளன. பூலித்தேவன் நினைவிடத்தில் நயினார் நாகேந்திரன் பழனிசாமி தான் கூட்டணியின் தலைவர், அவர் எடுக்கிற முடிவுகள் தான் எங்கள் முடிவு என்று பேசிய பிறகு நாங்கள் அந்த கூட்டணியில் இருக்க முடியுமா. நயினார் நாகேந்திரன் நாங்கள் திட்டமிட்டு வெளியேற வேண்டும் என்று செயல்பட்டிருக்கிறார். பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து துவங்கப்பட்டது அ.ம.மு.க., பா.ஜ.,விற்காக அக்கட்சித் தலைவரான நயினார் நாகேந்திரன் கட்சிக்குண்டான நல்லதை செயல்படுத்துவதாக தெரியவில்லை. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக முன்னாள் தலைவர் அண்ணாமலை எங்களிடம் அவசரப்பட வேண்டாம், கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொண்டார். பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டு நாங்கள் வர முடியுமா, எங்கள் கட்சியை அழித்துக் கொண்டு நாங்கள் தற்கொலைக்கு சமமான முடிவை எடுக்க முடியுமா என அண்ணாமலையிடம் தெரிவித்தேன். எனக்காக தேனி தொகுதியை விட்டு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நானும் அவரும் ஒன்றாக பயணிப்போம். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. சுய கவுரவம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவருக்காக நான் குரல் கொடுப்பேன். நயினார் நாகேந்திரன் ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டிருந்தால் வாங்கி கொடுத்திருப்பேன் என்று சொல்வதே ஆணவம். நாங்கள் அமைதியாக இருக்க இருக்க துரோகம் நியாயப்படுத்துவதை நினைத்து கூட்டணியில் இருந்து வெளியேறினோம். இதற்கு முழுக்க முழுக்க காரணம் நயினார் நாகேந்திரன் தான். கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதற்கு அண்ணாமலை காரணமல்ல. அண்ணாமலை தலைவராக இருந்தபோது கூட்டணி தலைவர்களுக்கு உரிய மரியாதை அளித்தார். எங்கள் பின்ணியில் அண்ணாமலை இருப்பதாக அரசியல் தெரியாதவர்கள் கூறுகின்றனர். எங்கள் வழியில் நாங்கள் செல்கிறோம். தொண்டர்களின் முடிவைத் தாண்டி நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. தொண்டர்களின் எதிர்காலம் கருதி நான் நல்ல முடிவு எடுப்பேன். யாரும் நினைக்காத கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது. அ.ம.மு.க., இடம் பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்றார்.