சிவகங்கை: லோக்சபா தேர்தலுக்கு பின் பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., நிச்சயம் மலரும்'' என சிவகங்கையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சிவகங்கையில் அ.தி.மு.க., தொண்டர் மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கே.ஆர்., அசோகன் தலைமை வகித்தார். மானாமதுரை தொகுதி செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், மருது அழகுராஜ், தர்மர் எம்.பி., ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி, வழக்கறிஞர் சுந்தரபாண்டியன், கே.வி., சேகர், மானாமதுரை நகர் செயலாளர் நமச்சிவாயம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் போஸ் பங்கேற்றனர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: அனைத்து தேர்தல்களிலும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம். கடந்த நாலரை ஆண்டு பிரதமர் மோடியின் ஆதரவில் ஆட்சி செய்துவிட்டு, அவரிடம் அமர்ந்து பேசிய பின், மீண்டு வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வாபஸ் பெற்று துரோகம் செய்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. கடந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சி சிறப்பாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. பொது சிவில் சட்ட ஷரத்துக்களை ஆய்வு செய்த பின்னர் தான், தமிழகத்திற்கு இச்சட்டம் தேவையா, இல்லையா என்பதை முடிவு செய்வோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, என்னிடமும், தினகரனிடமும் தனியாக போட்டியிடுவதை வாபஸ் பெறக்கோரினார். எதற்காக என்றால் நமக்கு எதிரான ஒரே கட்சி தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு தான். ஆனால், அங்கும் வீம்பாக போட்டியிட்டு 66,000 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.,வை தோல்வி அடைய செய்தவர் பழனிசாமி. எனவே 2024 லோக்சபா தேர்தலுக்கு பின், பழனிசாமியே இல்லாத அ.தி.மு.க., தமிழகத்தில் மலர்ந்தே தீரும். நடிகர் விஜய் கட்சி துவக்கியதை வரவேற்கிறேன், என்றார்.