உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பிரதமரின் கிராம சாலை திட்டம் கிடப்பில் ரூ.4.26 கோடி ரோடு பணி ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிப்பு

 பிரதமரின் கிராம சாலை திட்டம் கிடப்பில் ரூ.4.26 கோடி ரோடு பணி ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிப்பு

சிவகங்கை: பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.4.26 கோடிக்கு 6 கி.மீ., துாரத்திற்கான காளையார்மங்கலம் - பாகனேரி சந்திப்பு ரோடு வரை புதுப்பிக்கும் பணி 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் (2024=-2025) நாட்டரசன்கோட்டை முதல் பாகனேரி சாலையில் காளையார்மங்கலத்தில் இருந்து இளந்தைமங்கலம், மாங்காட்டுபட்டி வழியாக பாகனேரி - பனங்குடி சாலை சந்திப்பு வரையிலான ரோட்டில் 19 இடங்களில் சிறுபாலங்கள் கட்டி, ரோட்டில் பழைய ஜல்லி கற்களை அகற்றி, புதுப்பித்து தரும் திட்டத்தின் கீழ் 6 கி.மீ., ரோடு புதுப்பிப்பு, சிறு பாலங்கள் கட்ட ரூ.3.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பணிகளை 2024 செப்., 11 ம் தேதி துவங்கி, 2025 ஜூன் 10 க்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி ஒதுக்கப்பட்டது. இப்பணியை எடுத்த ஒப்பந்ததாரர் கடந்த 6 மாதத்திற்கு முன் பழைய ரோட்டை பெயர்த்து எடுத்து, அதில் ரோடுரோலர் கொண்டு சமன்செய்ததோடு, ரோட்டை புதுப்பிக்கும் பணியை முடித்து கொடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார். இதனால் காளையார்மங்கலம் முதல் பாகனேரி - பனங்குடி ரோடு சந்திப்பு வரை 6 கி.மீ.,க்கு இடைப்பட்டுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். சேதமான சாலையில் மக்கள் தவிப்பு இளந்தைமங்கலம் யோகேஷ்வரன் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக ரோட்டை புதுப்பிக்காமல், பழைய ரோட்டை தோண்டி போட்டுவிட்டு சென்றதால் எந்த வாகனங்களும் வரமுடியவில்லை. கிராம மக்கள் இந்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். பிரதமரின் கிராம சாலை திட்ட ரோட்டை விரைந்து புதுப்பித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒப்பந்ததாரருக்கு அபராதம் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வனத்துறை வழியாக இந்த ரோடு சென்றதால், அத்துறை அனுமதிக்காக தாமதம் ஆனது. அனுமதி பெற்றுவிட்டோம். இருப்பினும் உரிய காலத்தில் பணி முடிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பணியை டிச.,க்குள் முடித்து தருவதாக ஒப்பந்ததாரர் தெரிவித்து, பணிகளை செய்ய உள்ளார். ரோடு பணிக்கான பில் தொகையை விடுவிக்கும் போது, அபராத தொகை ரூ.1 லட்சம் பிடிக்கப்படும். விரைந்து பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர். இது குறித்து ஒப்பந்ததாரரின் கருத்தை கேட்க அவரது அலைபேசியில் அழைத்தபோது, அவர் எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்