| ADDED : ஜன 09, 2024 12:21 AM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி ரயில் நிலைய பிளாட்பாரத்தில்கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி நீண்ட நாட்களாக மூடப்படாததால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில் நின்று செல்கிறது. திருப்பாச்சேத்தியைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுரை, ராமேஸ்வரம் செல்ல இந்த ரயிலையே நம்பியுள்ளனர். திருப்பாச்சேத்தியில் மதுரை/ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மட்டுமே நின்று செல்லும் என்பதால் தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்வார்கள்.ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கேபிள் பதிப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குழி தோண்டப்பட்டது. இன்று வரை அந்த குழி மூடப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழியை முதியோர், பெண்கள் கடக்க முடியாமல் சுற்றி சுற்றி வருகின்றனர். பலமுறை கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவேண்டும்என வலியுறுத்தியும் ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.