| ADDED : பிப் 14, 2024 05:33 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்டி தரம் பிரிக்க இடம் இல்லாததால் நகரில் ஆங்காங்கே ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதால் அவை சிதறி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. சிவகங்கை நகராட்சிக்கு சுந்தரநடப்பு பகுதியில் குப்பை கிடங்கு இயங்கி வந்தது. இந்த குப்பை கிடங்கு செயல்பட எதிர்ப்பு கிளம்பியதால் கிடங்கு மாற்றப்பட்டது. நகரில் சேகரமாகும் குப்பை மானாமதுரை ரோடு தெற்கு மயானம், காளவாசல், மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட இடங்களில் கொட்டி நுண் உரம் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.நகராட்சியில் சேகரமாகும் மக்காத குப்பையை கொட்ட இடம் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் கவுன்சிலர்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை.எனினும் தினமும் சேகரிக்கப்படும் குப்பை ஆங்காங்கே கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவதோடு துர்நாற்றம் வீசும் நிலை தான் தொடர்கிறது.தற்போது நகரில் சிவகங்கை தொண்டி மேம்பாலம் இறக்கத்தில் ரயில்வே ஸ்டேஷன் பகுதி, மஜித் ரோடு, கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், உழவர் சந்தை, காந்திவீதி மத்திய கூட்டுறவு வங்கி அருகில், கல்லுாரி ரோடு, என நகரின் எங்கு பார்த்தாலும் குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.