சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவில் ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 76,200 காய்கறி மற்றும் கீரை விதை தொகுப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சிறு தானியங்கள் போன்ற பயிர்களின் மூலம் ஊட்டச்சத்து வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுகிறது. குறிப்பாக மக்களின் உடல் நலத்திற்கான ஊட்டச்சத்து மிக்க உணவினை உரிய அளவில் உட்கொள்வது அவசியம். அதற்கு தினமும் 400 கிராம் காய்கறி, பழங்கள் எடுக்க வேண்டும். மேலும் ஊட்டச்சத்து அளிக்கும் காய்கறி, பழங்களுடன், பயறு, சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களுக்கு நஞ்சற்ற காய்கறிகள் கிடைக்கும் விதமாக 100 சதவீத மானியத்தில் காய்கறி, பழச்செடி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தோட்டக்கலை துறை சார்பில் ரூ.60 மதிப்பில் 2 கிராம் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை 3 கிராம், கீரை 5 கிராம் என காய்கறி, கீரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. அதே போன்று பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழச்செடிகள் ரூ.100 மதிப்பீட்டில், வேளாண் துறை சார்பில் ரூ.67 மதிப்பில் புரதசத்து நிறைந்த மரத்துவரை, காராமணி, தட்டைபயறு 510 கிராம், அவரை 10 கிராம் உள்ளிட்ட 3 பயறு வகைகள் விதை தொகுப்பு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட அளவில் 6 வகை காய்கறி தொகுப்பு 46 ஆயிரம், 3 வகை பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 28,200, 3 வகை பயறு தொகுப்புகள் 2 ஆயிரம் வரை 100 சதவீத மானியத்தில் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த காய்கறி, பயறு விதை தொகுப்பினை பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.