| ADDED : ஜன 05, 2024 04:46 AM
திருப்புவனம் : திருப்புவனம் வட்டார நெல் வயல்களில் பகலில் மயில்களும், இரவில் பன்றிகளும் நுழைந்து நாசப்படுத்துவதால் சேலையால் வேலி அமைத்தும் கம்பு நட்டு அதில் பிளாஸ்டிக் சாக்குகளை கட்டியும் விவசாயிகள் பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.திருப்புவனம் வட்டாரத்தில் அட்சயா,ஆர்.என்.ஆர்.,என்.எல்.ஆர்.,கோ 50 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகிறது.திருப்புவனம் வைகையை ஒட்டிய பகுதி என்பதால் பம்ப்செட் கிணறுகளும் உள்ளன. பம்ப் செட் விவசாயிகள் ஆகஸ்ட் மாதமே 90 முதல் 120 நாட்களில் விளைச்சலுக்கு வரும் நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர்.வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாக தற்போது ஒரு சில கிராமங்களில் நெல் நடவு தொடங்கியுள்ளன.வடகிழக்கு பருவமழையை நம்பி நான்காயிரம் எக்டேரில் நெல் நடவு பணி நடைபெறும். இந்தாண்டு இதுவரை மூவாயிரத்து 500 எக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.தற்போது நடவு பணிகளும் நடந்து வருவதால் நான்காயிரம் எக்டேரிலும் நெல் நடவு செய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்டில் பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது நெல் விளைச்சல் கண்டு அறுவடை தொடங்கியுள்ளது. நெல் விளைச்சல் கண்டுள்ள வயல்களில் பகலில் மயில்களும் இரவில் பன்றிகளும் கூட்டம் கூட்டமாக வந்து நாசப்படுத்தி வருகின்றன.நெல் பயிர்களை வேருடன் பிடுங்கி போடுவதால் தரையில் கதிர்கள் சாய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.மயில்கள் நெற்கதிர்களில் உள்ள நெல்லை உருவி அப்படியே வயலில் போட்டு விடுகின்றன. இதனால் வைக்கோல் மட்டும் அறுவடைசெய்ய வேண்டியுள்ளது. மயில், பன்றிகளை எவ்வளவு தான் காவல் காத்து விரட்டினாலும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் வயல்களைச் சுற்றிலும் சேலையால் வேலி அமைத்துள்ளனர்.மேலும் வயல்களை சுற்றிலும் கருவேல மர கம்புகளை நட்டு வைத்து அதன் உச்சியில் பிளாஸ்டிக் சாக்குகளை பொம்மை போல் வைத்துள்ளனர். மேலும் காற்று வீசும் போது பிளாஸ்டிக் சாக்குகளில் இருந்து சரசரவென சப்தம் எழுவதால் மயில்கள் ஓடிப்போய்விடுகின்றன. சேலையால் வேலி அமைத்துள்ளதால் பன்றிகள் உள்ளே நுழைய முடிவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் பெரும்பாலான வயல்களில் இது சாத்தியமில்லை. ஒருசில வயல்களில் வேறு வழியின்றி விவசாயிகள் இதுபோன்று வேலி அமைத்துள்ளனர்.