| ADDED : ஜூலை 18, 2024 07:18 PM
தென்காசி,:தென்காசி மாவட்டம், கடையநல்லுாரில், 1987ல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்கள், 15 பேருக்கு 44 லட்சத்து, 47,497 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யவும், மின் இணைப்பை துண்டிக்கவும் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.கோர்ட் ஊழியர் அகிலா முன்னிலையில் நில உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மின் இணைப்பை துண்டிக்கவும், 10 கம்ப்யூட்டர்கள், 10 பீரோக்கள், 10 டேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யவும் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தனர்.அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்பொருட்கள் நில உரிமையாளர்கள் ஹிதாயத்துல்லா, அப்துல் கயூம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, கோட்டாட்சியர் லாவண்யா உடனடியாக தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, 30 நாட்கள் அவகாசம் கேட்டும், அதற்குள் இழப்பீட்டை வழங்கி விடுவதாகவும் உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, ஜப்தி உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே இரு முறை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டும் அவகாசம் கேட்டு இழப்பீடு வழங்கப்படாததால் மூன்றாவது முறையாக ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.