கடையநல்லுார்:நல்ல கல்லுாரியில் படிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படியுங்கள், பெற்றோர்களின் கனவை நினைவாக்குங்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு செய்ய வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வகுப்பறை, ஆய்வகம், கட்டடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.தொடர்ந்து, வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்தும் விதம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து 11ம் வகுப்பிற்கு சென்ற அவர், மாணவர்களை எழுப்பி புத்தகத்தில் குறிப்பிட்ட பகுதியை வாசிக்க கூறினார்.பின்னர் அமைச்சர் மாணவர்களிடையே பேசியதாவது:௧௧ மற்றும் ௧௨ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இந்த தருணம் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாகும். விளையாட்டு தேவை தான். அதே நேரத்தில் தேவையற்ற விளையாட்டுகளை தவிர்த்து, பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால்தான் நல்ல கல்லூரிகளில் சேர்ந்து பயில முடியும்.தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் உள்ளன. அவற்றை பார்த்து தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு மதிப்பெண்களை எடுப்பதற்கு தயாராக வேண்டும். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கவன சிதறல் இருக்க கூடாது. படிக்கின்ற மாணவர்களை, மற்ற மாணவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.பெற்றோர்கள் சிரமப்பட்டு நம்மை படிக்க வைத்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை நனவாக்கி, நல்ல கல்லுாரியில் சேர்ந்து விட்டால் வளாகதேர்வு மூலம் வேலை வாய்ப்பையும் பெற்றுவிட முடியும். ஒவ்வொரு பாட வேளையிலும் பாடம் முடித்த பின்பு மாணவர்களை வாசித்து காட்ட ஆசிரியர்கள் கூற வேண்டும். அவர்கள் வார்த்தையை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சரியாக உச்சரிக்கவில்லை என்றால் அதை சரி செய்ய ஆசிரியர்கள் முயல வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.முன்னதாக வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டில் உள்ள பெயர்களை வாசித்த அவர், வருகை தராத மாணவர்களின் விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து ஹை டெக் ஆய்வகத்தை அவர் பார்வையிட்டார்.கழிவறையை பார்வையிட்ட அமைச்சர், போதிய துப்புரவு பணியாளர்களை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.* கடையநல்லுாருக்கு வந்த அமைச்சரை சங்கரன்கோவில் எம்.எல்.ஏ., ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக., பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் செல்லத்துரை, கடையநல்லுார் நகராட்சி தலைவர் ஹபீபுர்ரஹ்மான், நகர செயலாளர் அப்பாஸ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட திமுக.,வினர் வரவேற்றனர்.