| ADDED : ஆக 12, 2024 11:42 PM
தென்காசி : தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியைக்கும் இதர ஆசிரியைகளுக்கும் இடையே உள்ள கோஷ்டி பூசலால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கோட்டையில் உள்ள எஸ். ஆர். எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். ஆக., 9ல் பிளஸ் 2 வகுப்பில் வாசனை திரவிய பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. அதனை துடைத்தவர்கள் மயக்கமுற்றனர். 14 மாணவிகள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு வெளியே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமையாசிரியை தமிழ்வாணி பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் தொடர்ந்தது. தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. கோஷ்பு பூசல்
இதனிடையே பள்ளி மாணவி ஒருவர் பேசி வெளியிட்ட ஆடியோ வெளியானது. அதில் ஒரு ஆசிரியை துாண்டுதலின் பேரில் தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவிகளை போராட்ட களத்திற்கு வருமாறும் குறைந்தது 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தலைமை ஆசிரியையை வெளியேற்ற வேண்டும். அதற்காக டிசியை திரும்ப கேட்க வேண்டும் எனவும் அவர் பேசுகிறார். இந்த ஆடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. பள்ளியில் ஒரு ஆசிரியை அனைத்து மாணவிகளையும் துாண்டி விடுவதும் தலைமை ஆசிரியைக்கு எதிராக சம்பவங்கள் நடந்துள்ளதும் தெரியவந்தது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு கமிட்டி அறிவித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.