உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / டெல்டா விவசாயிகளின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவே டைடல் பார்க்

டெல்டா விவசாயிகளின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவே டைடல் பார்க்

தஞ்சாவூர்:தஞ்சாவூர், மேலவஸ்தாசாவடியில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க்கினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டாவில், விவசாயிகளின் படித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகவும், தொழில்நுட்ப புரட்சியை உருவாக்குவதற்காகவும் இந்த டைடல் பார்க் தமிழக முதல்வர் அமைத்துள்ளார். இந்தக் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. சில வாரங்களில் தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இப்பார்க்கில், இதுவரை இரண்டு நிறுவனங்கள் துவங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஏழு நிறுவனங்கள் துவங்குவதற்கு காத்திருக்கின்றனர். மேலும், நிறுவனங்கள் முன் வந்தால் அருகிலுள்ள இடத்தில் கட்டடம் கட்டப்படும். இதன் வாயிலாக 1,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.இதேபோல, விழுப்புரத்தில் டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் டைடல் பார்க் பணிகள் நடந்து வருகிறது. ஊட்டியில் மலைவாழ் மக்களுக்காக டைடல் பார்க் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.தஞ்சாவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாக, சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.இதில், பல புதிய நிறுவனங்கள் துவங்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக செங்கிப்பட்டியிலுள்ள பழமையான காசநோய் மருத்துவமனையை அகற்றப் போவதாக சிலர் வதந்தியை உருவாக்கி பரப்பி வருகின்றனர். காசநோய் மருத்துவமனை உள்ள இடத்துக்கும், சிப்காட் தொழிற்பேட்டைக்கும் தொடர்பில்லை. மேலும், காசநோய் மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, சிப்காட்டுக்கு பயனுள்ளதாக செய்யப்படும். எனவே, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் இவ்வாறு அவர் கூறினார் .

3.57 லட்சம் மாணவர்கள் சேர்க்கை:

அப்போது, ஆய்வின் போது உடனிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறியதாவது: அரசு பள்ளிகளில், இந்தாண்டு இதுவரை 3.57 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 5 சதவீதம் கூடுதலாகும். இதையொட்டி, தேவையான வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை