தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள தொழிற்சலைகள், தோட்ட நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் வெளி மாநில தொழிலாளர்கள் 1372 பேர் நல வாரிய இணைய தளத்தில் பதிவு செய்து பணிபுரிகின்றனர் என தொழிலாளர் அமலாக்க உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் தெரிவித்தார்.மாவட்டத்தில் தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், ஓட்டல்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பணிப்பதிவேடு, அவர்களுக்கான அடிப்படை வசதி, உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா என தொழிலாளர் நலன்களை அமல்படுத்துவதை கண்காணிக்க தொழிலாளர் நலத்துறையின் அமலாக்க பிரிவு செயல்படுகிறது. இப் பிரிவின் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் சங்கர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது: தொழிலாளர் அமலாக்க உதவி ஆணையர் பணி பற்றி... கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் இன்னும் பிற இடங்களில் சட்ட விதிக்கள் சரியாக பின்றப்படுகிறதா. தொழிலாளர்களுக்கு உரிய விடுமுறை, சம்பளம் வழங்கப்படுகிறதா என கண்காணிப்பது. விதி மீறும் நிறுவனங்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, கடை நிறுவனங்களில் எடையளவு சட்டம் உள்ளிட்டவை பற்றிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது முக்கிய பணியாகும். கடைகள், நிறுவனங்களில் ஏதற்காக ஆய்வு
துறைத்தலைவர் மூலம் மாதந்தோறும் 'எபிச்' இணைதளம் மூலம் கடைகள், நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனசட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம், சம்பள பட்டுவாடாச் சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம், ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டம், சட்டமுறை, எடையளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகள் ஆகிய சட்ட பிரிவுகளில் ஆய்வுகள் நடத்தப்படும். இந்த ஆய்வுகள் செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. துறை அலுவலர்கள் ஆய்வு பற்றி கடைகள், நிறுவனங்களில் சில பதிவேடுகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குறிப்பாக பணிபுரியும் தொழிலாளர்கள் பற்றிய விபரம், அவர்களின் விடுப்பு பதிவேடு, சம்பள பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்கிறோம். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்கிறோம். 2023 ஜன., முதல் தற்போது வரை 922 கடை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முரண்பாடு கண்டறியப்பட்டுள்ள 147 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்களில் என்ன வகையான ஆய்வு
உணவு நிறுவனங்களிலும் பதிவேடுகள் ஆய்வு செய்யப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கப்படுகிறதா, வார விடுமுறை வழங்கப்படுகிறதா என ஆய்வுகள் செய்யப்படும். கடந்த 18 மாதங்களில் 373 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய பண்டிகை விடுமுறை சட்டம் பற்றி
தேசிய பண்டிகை விடுமுறையின் படி கடைகள், நிறுவனங்கள் குடியரசு தினம் ஜன.,26, தொழிலாளர் தினம் மே1, சுதந்திர தினம் ஆக.,15, காந்தி ஜெயந்தி அக்.,2 ஆகிய தினங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். அல்லது அன்று பணிபுரிபவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தவிர நிறுவனங்கள் மேலும் 5 தினங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். அந்த விடுமுறை தினங்களை நிறுவனங்கள் முன்கூட்டியே தொழிலாளர் நலத்துறைக்கு தெரிவிக்கின்றன. ஜன.,2023 முதல் கடந்த மாதம் வரை 706 நிறுவனங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 82 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்படுகிறதா
அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்கிறது. ஆண்டு தோறும் ஏப்.,1 முதல் புதிய அகவிலைப்படி உயர்வு அறிவிக்கிறது. அதன்படி நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட குறைந்த பட்ச சம்பளம் வழங்குகின்றனவா என ஆய்வு நடத்துகிறோம். இச்சட்டம் தொடர்பாக ஜன.,2023 முதல் ஜூன் 2024 வரை 1059 ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் 53 விதிமீறல் கண்டறியப்பட்டது. இச்சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவைத் தொகையுடன் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தரப்படுகிறது. இந்தாண்டு இதுவரை 60 நிறுவனங்களில் ஆய்வு செய்து அதில் 15 விதிமீறல் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா
குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா என்பது தொடர்பாக தொடர்ந்து சோதனை செய்கிறோம். வளரிம் பருவ தொழிலாளர்கள் என்பது 15 வயது முதல் 17 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களை ஆபத்தான தொழில்களான வெல்டிங், ஒர்க் ஷாப், இரும்பு தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடாது. கடந்தாண்டு 288 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 நிறுவனங்களில் 4 வளரிளம் பருவத்தினர்கள் வேலை செய்வது கண்டறியப்பட்டது. அவர்களை மீட்டு நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை 138 இடங்களில் சோதனை செய்துள்ளோம். இதில் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியவில்லை. பிற சோதனை நடவடிக்கைகள் பற்றி
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மோட்டார் போக்குவரத்து சட்டம் தொடர்பாக 24 ஆய்வுகளில் 6 குறைகள், சட்டமுறை எடையளவுச்சட்டத்தில் 1675 ஆய்வு செய்ததில் 205 முரண்பாடுகள், பொட்டலப்பொருட்கள் குறித்து 359 ஆய்வுகளில் 12 குறைபாடு கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனரா.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 43 நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளோம். கொத்தடிமை தொழிலாளர்கள் யாரும் இல்லை. வெளிமாநில தொழிலாளர்கள எவ்வளவு பேர் பணிபுரிகின்றனர்
வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் போது, வேலை அளிப்பவர்கள் https://labour.tn.gov.in.ism என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த இணையதளத்தில் அவர்களின் ஆதார் எண், அலைபேசி எண், முகவரி உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றப்படுகிறது. வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் போது அவர்களின் குழந்தைகளுக்கு, அவர்களின் தாய் மொழியில் கல்வி வழங்குவதை உறுதி செய்ய அறிவுருத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் 830 பேர், தோட்ட நிறுவனங்களில் 252பேர், கடைகள், உணவு நிறுவனங்களில் 290 பேர் என 1372 பணிபுரிகின்றனர். மேலும் தொழிலாளர்கள் பணியில் இருந்து விடுவித்தால், அதனையும் இணையதளத்தில் பதிவேற்ற கூறப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பாக நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. என்றார். வியாபாரிகள் நிறுவனங்களுக்கு கூறும் ஆலோசனை
நிறுவனங்கள் தொழிலாளர் தொடர்பான பணிப்பதிவேடுகள், சம்பள பதிவேடுகள் உள்ளிட்டவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச சம்பளம் அவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். வியாபாரிகள் தராசுகளுக்கு உரிய காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள், தொழிலாளர் தங்கள் புகார்கள், குறைகளை தேனி கலெக்டர் அலுவலகம் அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள தொழிலாளர் அமலாக்க உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகவோ, கடிதம் மூலமோ தெரிவிக்கலாம். அல்லது 04546 -250 853 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். என்றார்.