| ADDED : ஏப் 16, 2024 05:10 AM
தேனி: கண்ணகி கோயில் திருவிழாவிற்கு தேனியில் இருந்து அதிகாலை 3:30 மணி முதல் பஸ்கள் இயக்க கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்ய பட்டது.தமிழக கேரள எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் திருவிழாவிற்கு அன்று மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏப்.,23ல் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார்.அவர் பேசியதாவது, கண்ணகி கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 13,500 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது. உணவு பாதுகாப்புத்துறையினர் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் பாட்டில்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.காட்டுத்தீ அபாயம் உள்ளதால் தீயணைப்புத்துறையினர் போதிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் தேனியில் இருந்து அதிகாலை 3:30 மணியில் இருந்து இயக்கிட வேண்டும். இது பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வசதியாக இருக்கும்.மாலையில் கூடுதல் பஸ்கள் குமுளியில் இருந்து இயக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பஸ் ஸ்டாண்டில் கூடுதல் மின் விளக்கு வசதி ஆகியவற்றை கூடலுார் நகராட்சி செய்ய வேண்டும். என அதிகாரிகளிடம் அறுவுறுத்தினார். லோயர் கேம்பில் இருந்து குமுளி வரை ஏப்.,23 மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 வரை கனரக வாகனங்கள் சென்று வர தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி, மாவட்ட வன அலுவலர் சமர்தா, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் தாசில்தார் சுந்தர்லால், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாஸ்கரன், போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ரவிக்குமார், தீயணைப்புத்துறை, கூடலுார் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரப்பணிகள் துணை அலுவலர்கள், உணவுப்பாதுகாப்புத்துறையினர் பங்கேற்றனர்.