| ADDED : மே 05, 2024 03:30 AM
உத்தமபாளையம், : உத்தமபாளையம் அருகே சின்ன ஒவுலாபுரத்தில் விவசாயி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிணற்றில் உடல் வீசப்பட்டது. ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.உத்தமபாளையம் அருகே சின்ன ஒவுலாபுரத்தில் வசித்தவர் துரைசாமி மகன் சந்திரவேல்முருகன் 46, இவர் சில நாட்களாக காணவில்லை.இவருடைய மகன் பிரசாத் 21, ராயப்பன்பட்டி போலீசில் மே 3 ல் தனது தந்தையை காணவில்லை என புகார் செய்து, போலீசார் விசாரித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சின்ன ஒவுலாபுரத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள எரசக்கநாயக்கனூர் மஞ்சள்நதி கண்மாய் அருகில் தண்ணீர் இல்லாத கிணற்றில், வெட்டு காயங்களுடன் சந்திர வேல்முருகன் இறந்து கிடந்தார். ராயப்பன்பட்டி போலீசார், சின்னமனூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் பிரேதத்தை கைப்பற்றினர்.போலீஸ் விசாரணையில், சந்திரவேல்முருகன் மே 2 ல், சின்ன ஒவுலாபுரம் வரதராசபுரம் அருகில் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்டு, உடலை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்று எரசக்கநாயக்கனுார் கிணற்றில் வீசியது தெரிய வந்துள்ளது. கொலை தொடர்பாக கொலையானவரின் உறவினர்கள் நிசாந்த் உள்ளிட்ட சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே இருந்து வந்த முன் பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.