உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடமலைகுடி ஊராட்சியில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிப்பு மழையால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

இடமலைகுடி ஊராட்சியில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிப்பு மழையால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

மூணாறு: இடமலைகுடி ஊராட்சியில் பரப்பியாறு குடியில் மர்ம காய்ச்சலால் பத்துக்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர்.மழை மற்றும் ரோடு வசதி இன்றி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தில் 24 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு என தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டு இடமலைகுடி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பரப்பியாறுகுடியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சல், வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். அதனை அறிந்து நேற்று முன்தினம் மருத்துவ குழு பரப்பியாறுகுடிக்குச் சென்றனர். அக்குழு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது எந்த வகை காய்ச்சல் என்பது தெரியவில்லை. இதனிடையே நேற்றும் மருத்துவ குழு சென்றனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் பாதிப்பு குறித்து தெரிய வரும்.ஆனால் அப்பகுதிக்கு ரோடு வசதி இல்லை. தவிர பரப்பியாற்றை கடந்து தான் பரப்பியாறுகுடிக்கு செல்ல வேண்டும். அதிலும் பாலம் கிடையாது. அப்பகுதியில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருவதால் பரப்பியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை 10 கி.மீ. தூரம் கேப்பைகாடு வரை டோலி கட்டி தூக்கி வர வேண்டும். அங்கிருந்து வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனால் கூடுதலாக வாச்சர்களை அனுப்புமாறு வனத்துறையினரிடம் மருத்துவ குழு கோரிக்கை விடுத்தனர். பாதிக்கப்பட்டவர்களை இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ