| ADDED : ஏப் 23, 2024 06:46 AM
கம்பம் : சுருளி அருவியில் தண்ணீர் விழுவது முழுவதும் நின்று போனதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை தவிர்க்க கம்பம்- சுருளி செல்லும் ரோட்டில் அறிவிப்பு பலகை வைக்க வனத்துறை முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தென் மாவட்ட சுற்றுலா தலங்களில் சுருளி அருவி முக்கிய இடம் பிடிக்கிறது. இங்குள்ள அருவியில் குளிக்க வெளி மாவட்டங்களில் இருந்து திரளாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல் ஆன்மிக தலமாகவும் உள்ளது. மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறப்பு பெற்ற தலமாகும்.கோடை காலங்களில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விடும். இந்தாண்டும் கடந்த ஒரு மாதமாக அருவியில் தண்ணீர் விழுவது முற்றிலுமாக இல்லை. தமிழ் வருடப் பிறப்பு நாள் மட்டும் தூவானம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, மறுநாள் அடைக்கப்பட்டது. இதனால் சுருளி அருவியில் நீர் வரத்து முழுவதும் நின்று விட்டது.கம்பம் பகுதியில் இருப்பவர்களுக்கு அருவியின் நிலை தெரியும். எனவே, அருவிக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், அருவி வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். தினமும் பல சுற்றுலா பயணிகள் சென்று ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.கம்பத்தில் சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைத்தால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதை தவிர்க்க வசதியாக இருக்கும். பயண நேரம், - எரிபொருள் மிச்சமாகும். வனத்துறை கம்பம், காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம் கோகிலாபுரம் விலக்கு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.