| ADDED : மே 02, 2024 02:41 AM
ஆண்டிபட்டி:தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் விழாவில் மாமன், மைத்துனர் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் நூதன நேர்த்திக்கடன் நிகழ்வு நடந்தது.இக்கோயில் பொங்கல் விழா இரு நாட்கள் நடந்தது. முதல் நாளில் கன்னியப்பபிள்ளை பட்டியிலிருந்து அம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து மறவபட்டி முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். மறுநாளில் காப்பு கட்டிய பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கிராமத்தில் மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் உடல் முழுவதும் சகதி பூசிக்கொண்டும், சணல் சாக்கு கட்டிக்கொண்டும், கயிற்றால் ஒருவரை ஒருவர் பிணைத்துக் கொண்டும் கோயில் முன் தரையில் விழுந்து அம்மனை வணங்கி கோயில் வளாகத்தை சுற்றிவந்து வழிபாடு செய்தனர்.பின் ஆளுக்கு ஒரு துடைப்பத்தை எடுத்து சகதியில் நனைத்து எடுத்து மாமன், மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இவ்வாறு செய்வதால் அவர்களுக்குள் உறவுமுறை நீடிக்கும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக இந்நிகழ்வு நடக்கிறது.