ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் ஜி.உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரத்தில் கூடுதல் மேல்நிலை தொட்டி அமைக்காததால் வாரம் ஒருநாள் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஜி.உசிலம்பட்டி ஊராட்சி ராமலிங்கபுரம் கிராமத்தை உள்ளடக்கியுள்ளது. ராமலிங்கபுரத்தில் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர் வினியோகத்திற்கு போதுமான மேல்நிலைத் தொட்டி இல்லை. கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் பல இடங்களில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. வள்ளல் நதி கூட்டுக்குடிநீர் திட்டம், சத்திரப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் இருந்தும் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட ஆற்று குடிநீர் நீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர்மட்டுமே அனைத்து தேவைக்கும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். ஊராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: கூடுதல் கொள்ளளவு தொட்டி தேவை
பாண்டியராஜன், ராமலிங்கபுரம்: இக் கிராமத்தில் 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி தண்ணீர் தேவைக்கு போதுமானதாக இல்லை. வாரம் ஒரு முறை மட்டுமே போர்வெல் நீர் வினியோகம் உள்ளது. கூடுதல் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைத்து சுத்திகரிக்கப்பட்ட ஆற்று குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கால்நடை வளர்ப்பு தொழில் அதிகம் இருப்பதால் தண்ணீர் தேவை அதிகம் உள்ளது. தூரத்தில் உள்ள மோட்டார் கிணறுகளில் இருந்து தண்ணீர் பிடித்து வந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சமுதாயக்கூடம் சேதம் அடைந்து பல மாதமாகியும் சரி செய்யப்படவில்லை. மழைக்கு ஒழுகுவதால் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. இதனை பராமரிப்பு பணி செய்து மேம்படுத்த வேண்டும். வீட்டு குடிநீர் இணைப்பு தர மறுப்பு
தர்மலிங்கம், ராமலிங்கபுரம்: ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதார பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. ராமலிங்கபுரத்தில் இருந்து ராணி மங்கம்மாள் சாலைக்கு 300 மீட்டர் இணைப்பு ரோடு இருந்தால் பொதுமக்கள் எம்.சுப்புலாபுரம் அரசுஒஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எளிதில் சென்று வர முடியும். தற்போது 2 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. சுடுகாடு செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் எரியவில்லை. இங்குள்ள குளியல் தொட்டியில் தண்ணீர் தேக்கும் நடவடிக்கை இல்லை. வண்ணான்குளம் முதல் தொட்டராயர்குளம் வரை உள்ள நீர் வரத்து கால்வாய் ராமலிங்கபுரம் வழியாக செல்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கால்வாய், குளம் தூர்வாரப்படாமல் புதர் மண்டியுள்ளது. தொட்டராயர் குளத்தில் நீர் தேங்கினால் இரண்டு ஆண்டுகள் இப்பகுதியில் நிலத்தடி நீர்மேம்படும். கால்வாய், குளம் ஆகியவற்றில் குப்பை, புதர்கள், ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக தெரிவித்து 80 வீடுகளுக்கு இணைப்பு தர மறுக்கின்றனர். விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ச்சி பணிக்கு நிதி பற்றாக்குறை
சுமேந்திரன், ஊராட்சித் தலைவர், ஜி.உசிலம்பட்டி: ராமலிங்கபுரத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி தரமான நிலையில் இருப்பதால் புதிய தொட்டிக்கு அனுமதி தர ஒன்றிய நிர்வாகம் மறுக்கின்றனர். சமுதாயக்கூடம் பராமரிப்புக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது நிதி ஒதுக்கீடு இன்னும் இல்லை. ஊராட்சியில் துப்புரவு பணிக்கு ஒரு நபரும், தூய்மை காவலர்கள் எட்டு பேர் பணியிடத்தில் 4 பேர் மட்டுமே இருப்பதால் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. மாநில நிதி குழு மானியம் ஊராட்சிக்கு போதுமானதாக இல்லை. இதனால் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றார்.