| ADDED : ஆக 05, 2024 07:33 AM
தேனி : 'முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது கண்டிக்கத்தக்கது.' என, பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.தேனி பா.ஜ., அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், அனைத்து மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ரூ.48 லட்சத்து 20 ஆயிரத்து 512 கோடி மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை. பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் இடம் பெறும். பெயர் குறிப்பிடாததால் புறக்கணிக்கப்பட்டது என்பது சிறுபிள்ளை தனமானது. தமிழகத்தின் பெயர் குறிப்பிட வில்லை என கூறி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருப்பது கண்டிக்கதக்கது. இதனால் மாநில வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று பேசி இருக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் பெயர் கூட தான் அறிவிக்கவில்லை. காங்., ஆட்சியில் 10 ஆண்டுகளில் தமிழகத்தின் பெயர் 3 முறை மட்டும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பத்து ஆண்டுகளில் 8,054 கோடி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சியில் 10 ஆண்டுகளில் 3 முறை பெயர் குறிப்பிடபட்டு ரூ.1 லட்சத்து ஐந்தாயிரத்து 160 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019 - 20 பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது., என்றார். உடன் மாவட்டத் தலைவர் பாண்டியன், நகரத் தலைவர் மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.