முத்தாலம்பாறையில் குடிநீர் கிடைக்காமல் தவிப்பு
கடமலைக்குண்டு: க.மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட முத்தாலம்பாறை கிராமத்தில் கூட்டுக்குடி திட்டத்தில் மோட்டார் பழுது அடைந்ததால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் உறை கிணற்றில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் உள்ளது. சில தினங்களுக்கு முன் குடிநீர் மின்மோட்டார் பழுதடைந்தது. குடிநீர் வாரியம் இதனை சரி செய்வதில் தாமதம் செய்வதால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். தனியார் தோட்டங்களில் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். குடிநீர் மோட்டாரை சரி செய்து குடிநீர் வினியோகத்தை சீராக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.