| ADDED : ஆக 22, 2024 03:20 AM
தேனி: வரி செலுத்துவோர் தினசரி கணக்கு புத்தகம் பராமரித்து தொடர்ந்து வருமான வரி தாக்கல் நிர்ணயித்த தேதிக்கு முன் பதிவு செய்தால் சிரமங்களை தவிர்க்கலாம்.' என, மதுரை வருமான வரித்துறை இணைக் கமிஷனர் சிவாஜி ஆலோசனை தெரிவித்தார்.தேனி மாவட்ட வருமான வரித்துறை சார்பில், பழனிசசெட்டிபட்டியில், முன்கூட்டியே வரி செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் ஆனந்த்குமார் வரவேற்றார். இணை ஆணையர் சிவாஜி பேசியதாவது: இந்தியாவில் வரி செலுத்துவோர் மூலம் கடந்த ஆண்டு ரூ.16.9 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம். வருமான வரிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. வருமான வரி தாக்கலில் விபரம் தெரிவிக்காமல் பணப்பரிவர்த்தனையில் ரொக்கமாக மாற்றியிருந்தால் வருமான வரிச்சட்டப்படி பணப்பரிவர்த்தனை செய்த மொத்தப்பணத்தில் 78 சதவீதம் அபராதமாகவும், தொகையின் மதிப்பு கூடினால் 100 சதவீத அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வரி செலுத்துவோர் அனைவரும், புக் ஆப் அக்கவுண்ட் (தினசரி கணக்கு புத்தகம் பராமரிப்பு), செலவின விபரங்களை பதிவு செய்வது, முதலீட்டு விபரங்களை கணக்கில் இணைப்பது, கையிருப்பாக தங்கம், ரொக்கம் வைத்திருந்தால் அந்த விபரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட 4 மிக முக்கிய அம்சங்களை தொடர்ந்து பராமரித்து நிர்ணயித்த தேதி முன் வரித்தாக்கல் செய்தால் பண இழப்பையும் தவிர்க்கலாம்.' என்றார்.நிகழ்வில் மூத்த ஆடிட்டர் பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் நடேசன், ஆடிட்டர் ஜெகதீஸ், ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி சுதாகர், வியாபாரிகள், வணிகர்கள் பங்கேற்றனர். தேனி இன்ஸ்பெக்டர் லலிதாபாய் நன்றி தெரிவித்தார்.