| ADDED : ஜூலை 10, 2024 05:02 AM
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் 'நோ பார்க்கிங்' பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 35 வாகனங்களுக்கு அபராதம் விதித்து, விதிமீறும் வாகனஓட்டிகளை டிராபிக் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் எச்சரித்துள்ளார்.தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் வாசல்கள் முன் டூவீலரை நிறுத்திவிட்டு பல பேர் வெளியூர்களுக்கு பணிக்கு சென்று விடுகின்றனர். மேலும் மதுரை செல்லும் பஸ்கள் திட்டச்சாலை வழியாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் திரும்பும்போது டூவீலர்கள் இடையூறாக ரோட்டில் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. பயணிகளை ஏற்றி பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் ஓட்டல்களின் வாசலில் நிறுத்தப்படுவதால் வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதனை கண்காணித்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், எஸ்.ஐ.,க்கள் கருப்பசாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டு இருந்த 30 வாகனங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். பஸ் செல்ல இடையூறாக நிறுத்தப்பட்ட 5 டூவீலர்களை பறிமுதல் செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று தலா ரூ.660 அபராதம் விதித்தனர். இன்ஸ்பெக்டர் கூறுகையில், டூவீலர்களை நோ பார்க்கிங் ஏரியா, போக்குவரத்திற்கு இடையூறாக விதிமீறி நிறுத்தினால் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு எடுத்து செல்லப்படும் என்றார்.