உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பராமரிப்பு இன்றி களையிழந்த வைகை அணை பூங்கா

பராமரிப்பு இன்றி களையிழந்த வைகை அணை பூங்கா

ஆண்டிபட்டி: தமிழகத்தில் பூங்காவிலேயே சிறந்தது என்று பெயர் பெற்ற வைகை அணை பூங்கா சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி களை இழந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.வைகை அணை கட்டப்பட்ட போது மீதம் இருந்த தொகையில் உருவாக்கப்பட்டது அணையில் இரு கரைகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட பூங்காக்கள். தேனி மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணை பூங்காவை ரசித்துச் செல்ல தவறுவதில்லை. 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்த வைகை அணை நீர் தேக்கம், அணையின் வலது, இடது கரைகளில் அமைந்துள்ள ஜீரோ, மான், ஜெமினி, பாம்பாட்டி, யானை, மச்சக்கன்னி, ஸ்டார், பயில்வான், மீன், குடிசை, மாதிரி அணை, ரயில் உட்பட பல்வேறு பெயர்களைக் கொண்ட பூங்காக்கள் உள்ளன.

மின்னொளியில் ஜொலித்த பூங்கா

20க்கும் மேற்பட்ட பூங்காக்களில் வளர்ந்திருந்த மரம், செடிகொடிகள், பரந்து விரிந்த பசுமையான புல் தரைகள் ஆகியவற்றால் கடந்த காலங்களில் பூங்காவில் ஒரு நாள் முழுவதும் ரசித்துச் செல்லும் வகையில் இருந்தது. மின்னொளியில் ஜொலித்த பூங்காவை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ரசிப்பதற்காகவே கூட்டம் அலைமோதும். இவ்வளவு சிறப்பு பெற்ற வைகை அணை பூங்காவை கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள், 300க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் பராமரித்தனர். தற்போது நிரந்தர பணியாளர்கள் 14 பேர், நூறுக்கும் குறைவான தற்காலிக பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பூங்காவின் அனைத்து பகுதிகளும் தொடர் பராமரிப்பில் இல்லை. சேதமடைந்த குழாய்கள் சீரமைப்பு இல்லை. பழுதான மின் விளக்குகளால் இரவில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. பாதுகாப்பு கருதி மாலை 6:00 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.சுற்றுலா பயணிகள் கூறியதாவது:

பொழுது போக்கு அம்சம் இல்லை

பாலமுருகன், கல்லூத்து, மதுரை: கடந்த பல ஆண்டுக்குப் பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் வைகை அணை பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்தோம். பூங்காவிலும் அமர்ந்து ரசிக்கும் வகையில் இல்லை. அனைத்து இடங்களிலும் குப்பை குவிந்து செடி, கொடிகள் பராமரிப்பு இன்றிஉள்ளது. பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்து கிடக்கின்றன. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சம் இல்லை. சுற்றுலா பயணிகள் அமரும் 'பெஞ்ச்' அனைத்தும் சேதமடைந்துள்ளது. பெயிண்டிங் செய்யப்படாத உடைந்த சிலைகள் ரசிக்கும் படியாக இல்லை. குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. தற்போதுள்ள சூழலில் ஒரு முறை வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மறுமுறை தவிர்க்கும் வகையில் உள்ளது.

களையிழந்த பூங்கா

முருகேசன், வெள்ளோடு திண்டுக்கல்: வைகை அணை பூங்காவில் ஒருநாள் முழுவதும் நேரத்தை செலவிடலாம் என்ற நம்பிக்கையில் குடும்பத்துடன் வந்தோம். பராமரிப்பில்லாத பூங்காக்கள் ஏமாற்றம் அளிக்கிறது. பூங்காவில் எந்த இடத்திலும் குடிநீர் வசதி இல்லை. விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது. பழமையான மரங்கள் கூட பராமரிப்பு இல்லை. சுற்றுலா வரும் பயணிகளும் தங்கள் இஷ்டத்திற்கு கட்டுப்பாடு இன்றி செல்கின்றனர். அரசு கவனம் செலுத்தாததால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைகிறது. கூடுதல் பணியாளர்களை நியமித்து பூங்காவை மீண்டும் முந்தைய நிலைக்கு கொண்டு வந்து மிளிரச் செய்ய வேண்டும்.

ரூ.2 கோடி மதிப்பீடு தயார்

வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பூங்கா பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு போதுமான அளவு இல்லை. பூங்காவை மேம்படுத்த ரூ.2 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்கள் நியமனத்திற்கு அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை