| ADDED : நவ 25, 2025 01:27 AM
மூணாறு: கேரளாவில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் பிரச்சாரம் நடக்கிறது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக டிச.9, 11 ஆகிய நாட்களில் நடக்கிறது. அதற்கு வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியுடன் நிறைவு பெற்றது. தீவிர ஓட்டு சேகரிப்பில் அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் பிரச்சாரத்தை கையாள வேண்டியது உள்ளது. குறிப்பாக இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட சில மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதில் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் மிகவும் அதிகமாக தமிழர்கள் வசிக்கின்றனர். அப்பகுதிகளில் நடக்கும் அரசியல் நிகழ்ச்சி உள்பட விழாக்களுக்கு நோட்டீஸ், போர்டு உள்ளிட்டவைகள் தமிழ், மலையாளம் மொழிகளில் அச்சிடப்பட்டு பயன்படுத்துவது வழக்கம். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்காக போஸ்டர், நோட்டீஸ், போர்டு ஆகியவை தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தவிர பிரச்சாரமும் இரண்டு மொழிகளில் நடக்கும். ஆகவே மாநிலத்தில் பிற பகுதிகளைவிட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் மாறுபட்டு காணப்படும்.