உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சிக்கலை சந்திக்கும் சின்ன வாய்க்கால் விவசாயிகள் கம்பத்தில் 700 ஏக்கர் விவசாயம் கேள்விக்குறி

 சிக்கலை சந்திக்கும் சின்ன வாய்க்கால் விவசாயிகள் கம்பத்தில் 700 ஏக்கர் விவசாயம் கேள்விக்குறி

கம்பம்: கம்பம் சின்ன வாய்க்கால் பாசனத்தில் இரவில் மின்நிலைய ஷட்டர்களை இறக்குவதால் 700 ஏக்கரில் நெல் சாகுபடி செய்வது கேள்விக்குறியாகி உள்ளது என விவசாயிகள் புலம்புகின்றனர் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறுகிறது. கூடலூரில் துவங்கி பழனிசெட்டிபட்டி வரை பாசன நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. 17 வாய்க்காலில் கம்பம் சின்னவாய்க்கால் குள்ளப்பகவுண்டன்பட்டியில் துவங்கி சாமாண்டிபுரம், மஞ்சகுளம், சுருளிப்பட்டி ரோடு, கம்பம் , காமயகவுண்டன்பட்டி ஏழரசு கோயில் வரை நீள்கிறது. இந்த வாய்க்கால் பாசனத்தில் 1400 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இரு போக சாகுபடியில் கம்பம் விவசாயிகள் நாற்று வளர்ப்பது, நடவு செய்வது, அறுவடை என அனைத்து பணிகளிலும், பிற பகுதி விவசாயிகளை விட 20 நாட்கள் முன்கூட்டியே செய்து விடுவார்கள். ஆனால் இந்த சீசனில் கடந்த அக். 17 ல் ஒரு நாள் பெய்த கனமழை காரணமாக, கம்பம் பள்ளத்தாக்கில் பெரும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றில் கட்டப்பட்டுள்ள பிவி 4 மைக்ரோ நீர்மின் நிலையம் பலத்த சேதமடைந்தது. இந்த மின் நிலையத்தால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து விட்டது. தடுப்பணை உடைந்ததால் தண்ணீர் முழுவதும் ஆற்றில் செல்கிறது. சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லவில்லை. தண்ணீர் செல்லாத காரணம் என்ன இரண்டாம் போகத்திற்கான நாற்றுகள் வளர்க்க தண்ணீர் வேண்டும். சின்ன வாய்க்காலில் தண்ணீர் வர வேண்டும் என்றால் பிவி 4 மைக்ரோ மின் நிலையத்தின் ஷட்டர்களை இறக்க வேண்டும். ஷட்டர் இறக்கினால் தண்ணீர் தேங்கி, சின்னவாய்க்காலுக்கு செல்லும். இரவில் ஷட்டரை மேலே தூக்கி விடுகின்றனர். இதனால் தண்ணீர் சின்ன வாய்க்காலுக்கு செல்ல முடியவில்லை. மீண்டும் காலையில் ஷட்டரை இறக்குகின்றனர். வாய்க்காலுக்கு வர பல மணி நேரம் ஆகிறது. சின்ன வாய்க்கால் புரவில் 700 ஏக்கருக்கு மட்டும் தண்ணீர் கிடைக்கிறது. மீதமுள்ள 700 ஏக்கர் தண்ணீர் கிடைக்காமல், விவசாயத்திற்கு நிலங்களை தயார்படுத்தும் பணி செய்ய முடியவில்லை. மேலும் வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு ஓடப்படி குளங்களிலும் தண்ணீர் நிரப்பவில்லை. இதனால் விவசாயிகள் நடவு பணியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவில் ஷட்டர்களை இறக்க வேண்டும் இரவில் எதிர்பாராதவிதமாக மழை வெள்ளம் வந்தால் ஏற்படும் பாதிப்பை எதிர் கொள்ளவே ஷட்டர்களை வாரிய அதிகாரிகள் மேலே தூக்கி விடுவதாக கூறுகின்றனர். கம்பம் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் கூறுகையில், சின்ன வாய்க்காலில் போதிய தண்ணீர் வராததால் கடை மடை பகுதியில் நடவு பணிக்கு வயல்களை பராமரிக்கும் பணி மேற்கொள்ள முடியவில்லை. குள்ளப்பகவுண்டன்பட்டி மின் நிலையத்தில் இரவில் ஷட்டர்களை மேலே தூக்குவதால் தான் தண்ணீர் செல்ல வில்லை. இதனால் 700 ஏக்கர் வரை விவசாயம் செய்ய முடியாத நிலை எழுந்துள்ளது. அதிகாரிகள் ஷட்டர்களை இறக்கி இரவு நேரங்களிலும் தண்ணீர் தர முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி