| ADDED : டிச 14, 2025 02:48 AM
கூடலுார்: கேரளாவில் இருந்து இறைச்சி, குப்பை கழிவுகளை லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் கொட்டும் போது போலீசார் பிடித்தனர். பல மாதங்களாக கொட்டி வந்த நிலையில் வாகனத்துடன் நேற்று முன்தினம் இரவு பிடித்தும் நேற்று மாலை வரை வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் செய்தனர். கேரளாவில் பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் கூடுதல் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கேரள கழிவுகள் அதிகம் கொட்டப்படுவது தொடர்கிறது. அவ்வப்போது அதிகாரிகள் பிடிப்பதும் பெயரளவில் அபராதம் விதிப்பதுமாக உள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்காததால் இச்சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கேரளாவில் இருந்து இறைச்சி குப்பை கழிவுகளை மினி லாரியில் ஏற்றி வந்து லோயர்கேம்ப் வைரவன் பாலம் அருகே முல்லைப் பெரியாற்றில் கொட்டுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் விஜயபாண்டி லாரியுடன் பிடித்தார். 10க்கும் மேற்பட்ட டிரம்களில் இருந்த கழிவுகள் கொட்டிய பின்னர் ஒரு டிரம்மில் மட்டும் இருந்த கழிவுகள் கைப்பற்றப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கூடலுார் நகராட்சி நிர்வாகம் புகார் கொடுத்தபின் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை புகார் கொடுக்கவில்லை. வழக்கமாக குமுளி மலைப்பாதை, கம்பமெட்டு மலைப்பாதைகளில் இரவில் கொட்டி செல்வார்கள். இது உடனே அனைவரின் கவனத்திற்கும் சென்று விடுவதால், பல மாதங்களாக முல்லைப் பெரியாற்றில் கொட்டுகின்றனர். தமிழகப் பகுதியில் போலீஸ், வனத்துறை சோதனைச் சாவடியை கடந்தே இங்குவருகின்றனர். ஆற்றில் பல இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களும், நேரடியாக பம்பிங் செய்யும் ஸ்டேஷன்களும் உள்ளன. நேரடியாக மக்களை பாதிக்கும் வகையில் ஆற்றில் கழிவுகளை கொட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக நேற்றுமாலை நகராட்சி சார்பில் லோயர்கேம்ப் போலீசில் புகார் செய்யப்பட்டது.