| ADDED : நவ 13, 2025 02:13 AM
தேனி: விபத்தில் இறந்த தேனி ஏட்டு முருகன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட ஏழு வங்கிகளில் ஊதிய கணக்கு வைத்துள்ள அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்து இருந்தார். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு முருகன் 37. இவர் தேனி ஆயுதப்படை வாகனப் பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தார். 2024 டிச.,16ல் எம்.சுப்புலாபுரம் அருகே டூவீலரில் சென்றபோது நடந்த விபத்தில் இறந்தார். இவரது ஊதிய கணக்கு தேனி ஸ்டேட் வங்கி கிளையில் நிர்வகிக்கப்படுகிறது. அரசின் ஒப்பந்தப்படி தேனி எஸ்.பி.,சினேகாபிரியா, ஸ்டேட் வங்கி மதுரை மண்டல மேலாளர் மதன், மதுரை தலைமை மேலாளர் கிருஷ்ணசுப்பிரமணியன், கிளை தலைமை மேலாளர்பிரதீப்ராபின் ஆகியோர் முன்னிலையில் ரூ.1 கோடிக்கான காசோலையை முருகனின் தாயார் சீலைக்காரியிடம் வழங்கினார். ஏட்டுவுடன் பணியாற்றிய 2011 பேட்ச் போலீசார் உடனிருந்தனர்.